அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஜியோமி’யின் இந்திய பிரிவுக்குச் சொந்தமான இந்திய வங்கிகளில் உள்ள 5,551 கோடி ரூபாயை முடக்கி இருக்கிறது அமலாக்கத் துறை.
அண்டை நாடான சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் அன்னிய செலாவணி உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. அந்த வகையில், ஜியோமி என்கிற செல்போன் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் அன்னிய செலாவணி வழக்கில் சிக்கி இருக்கிறது. அதாவது, இந்த ஜியோமி நிறுவனம், காப்புரிமைத் தொகை என்கிற பெயரில் சீன நிறுவனத்துக்கும், அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாயை வங்கிகள் வாயிலாக அனுப்பி வைத்திருக்கிறது. இதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவர் மனுகுமார் ஜெயினிடம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத் துறை விசாரித்தது. இதைத் தொடர்ந்து, ஜியோமி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக இந்திய வங்கிகளில் இருக்கும் 5,551 கோடி ரூபாயை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.