பி.எம். கேர்ஸ் திட்டம்: பிரதமர் மோடி துவக்கம்!

பி.எம். கேர்ஸ் திட்டம்: பிரதமர் மோடி துவக்கம்!

Share it if you like it

கொரோனாவால்  உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள் என்று பி.எம். கேர்ஸ் திட்டத் துவக்க விழாவில் பிரதமர் மோடி கூறினார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பி.எம். கேர்ஸ் மூலம் இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். அந்த வகையில், குழந்தைகளுக்கான புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். அதாவது, 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28-ம் தேதிவரை கொரோனா காரணமாக பெற்றோர்கள் இருவரையும் அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இத்திட்டம் 2021 மே 29-ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், இன்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், “நாடு தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. உலகளவில் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின்போது நாம் மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதேபோல், இளைஞர்கள் மீதான நம்பிக்கையும் நல்ல பலனைத் தரும். சப்கா சாத்- சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்- சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்தால் நாடு முன்னேறுகிறது. இன்றைய குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பலன் பெறுவர். குறிப்பாக, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கும். ஏற்கெனவே, ஆயுஸ்மான் ஹெல்த் கார்டு மூலம் குழந்தைகள் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமர் நிதியின் மூலம் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிரதமர் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இன்றைய விழாவில் நான் குழந்தைகள் மத்தியில் ஒரு பிரதமராக பேசவில்லை. அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் பார்க்கிறேன். குழந்தைகள் மத்தியில் இன்று மிக மகிழ்வாக உள்ளேன். கொரோனாவால்  உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆளும் நல்ல நிர்வாகத்தால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதுடன் மக்களிடைய பெரும் நம்பிக்கையும் பிறந்திருக்கிறது என்று கூறினார்.


Share it if you like it