சர்வதேச அளவில் 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தோடு இந்தியா உயர்ந்து நிற்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை (சி.ஐ.ஐ.), இன்வெஸ்ட் இந்தியா ஆகியவை இணைந்து தொழில் நிறுவன அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கோவையில் கடந்த 26-ம் தேதி நடத்தின. இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசுகையில், “நம் நாட்டில் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. இணையவழி இயங்குதளங்கள் கட்டுப்பாடானவை என்பதோடு, வணிக நிறுவனங்கள், நுகர்வோர் இடையே பாலமாகவும் விளங்குகிறது. ஆகவே, டிஜிட்டல் முன்னேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் நல்ல வாய்ப்புகளைப் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. தற்போது நம் நாட்டின் பொருளாதாரம் 3.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக (236 லட்சம் கோடி ரூபாய்) இருக்கிறது. தவிர, மிகுந்த நம்பகத்தன்மையுடைய தலைமை மற்றும் ஜனநாயக கட்டமைப்புடன் நம் நாடு திகழ்ந்து வருவதால், நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது. மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தை ஆதரிக்கிறது. ஆகவே, நிலையான கொள்கை வாயிலாக நல்ல ஸ்திரமான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீட்டையும் மதித்து வருவதால் ஜவுளி, பொறியியல் உள்ளிட்ட துறைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன” என்றார்.
இந்நிகழ்ச்சியில், வர்த்தக அமைச்சக இணைச் செயலர் ராஜேந்திர ரத்னு, ஜவுளி அமைச்சக சிறப்புச் செயலாளர் வி.கே.சிங் ஆகியோர் கலந்துகொண்டு தொழில்துறை நலனுக்காக அமைச்சகங்களால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசினர். மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) துணைத் தலைவர் கமல் பாலி, தமிழக தலைவர் சங்கர் வாணவராயர் மற்றும் கோவை தலைவர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.