இந்த இருண்ட காலத்திலும் பொருளாதாரத்தில் ஒளிரும் புள்ளியாக இந்தியா இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியிருக்கிறார்.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 140 நாடுகளில் இந்தியா 127-வது இடத்தில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் சட்டியை உருட்டி வருகின்றன. ஆனால், உலக நாடுகளோ இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கடந்த ஜூலை மாதம் ஐ.எம்.எஃப். அமைப்பு கூறியிருந்தது. இதனிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு உலகின் டாப் 20 பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஜி20 அமைப்புக்கு இந்தியாவை தலைமையேற்க வைத்திருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த இருண்ட காலத்திலும் இந்திய பொருளாதாரம் ஒளிரும் புள்ளியாக இருக்கிறது என்று ஐ.எம்.எஃப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறி, இந்தியாவை பாராட்டி இருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கிறிஸ்டலினா, “கடந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய், தற்போது நடந்துவரும் உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் கடுமையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. தற்போதைய நிதி நெருக்கடிக்குப் பின்னால் உள்ள சாத்தியமான காரணங்களில் சீனாவின் பொருளாதார மந்தநிலையையும் ஒன்று. கொரோனா பரவாமல் தடுக்க சீன அரசாங்கம் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கிறது.
ஆகவே, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கியப் பொருளாதாரங்கள் 2023-ம் ஆண்டில் மிக மந்தமான அளவிலேயே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த இருண்ட காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரம் ஒளிரும் புள்ளியாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த போக்கு உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும். அடிப்படை பொருளாதார சீர்த்திருந்தங்களையும் மேற்கொண்டு, இத்தகைய வளர்ச்சியை இந்தியா பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா வலிமையான பொருளாதாரத்தை எட்டி ஜி20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்கும் நிலைமைக்கு வளர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. தனது சிறப்பான தலைமையின் மூலம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.