இந்தியா – எகிப்து இணைந்து தேஜஸ் உற்பத்தி ஆலை!

இந்தியா – எகிப்து இணைந்து தேஜஸ் உற்பத்தி ஆலை!

Share it if you like it

இந்தியாவும், எகிப்தும் இணைந்து தேஜஸ் போர் விமான உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2016-ம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல் சிசி இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது, பிரதமர் மோடியுடனான சந்திப்பின் முடிவில், கடல் போக்குவரத்து தொடர்பான முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புகொண்டனர். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தகவல் மற்றும் செயல்பாட்டு பரிமாற்றங்களை அதிகரிப்பது, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு இரு நாட்டு கடற்படைகளான இந்தியாவின் INS டாபர் மற்றும் எகிப்தின் அலெக்ஸ்சான்ட்ரா ஆகியவை கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டன.

இதனிடையே, எகிப்து விமானப்படை தளபதி மஹ்மூத் ஃபோஅத் அப்துல் எல்-கவாட் தலைமையிலான எகிப்திய விமானப்படையின் பிரதிநிதிகள் குழு சமீபத்தில் டெல்லி வந்தது. இக்குழு இந்திய ஆயுதப் படைகளுடன் எதிர்கால ஈடுபாடுகளை பற்றி விவாதித்ததோடு, பல்வேறு ஆயுதங்கள் மற்றம் தளங்களின் இறக்குமதிக்காக இந்திய பாதுகாப்புத் துறையுடனான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தனர். தொடர்ந்து, எகிப்திய விமானப்படையின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அப்பாஸ் ஹெய்மி, டெல்லியில் இந்திய கடற்படையின் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமாரை சந்தித்தார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதில் இருவரும் புதிய வழிகளை ஆராய ஒப்புக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்திய விமானப்படையும் எகிப்து விமானப்படையும் இணைந்து போர்ப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் 24-ம் தேதி துவங்கிய இப்போர் பயிற்சி எதிர்வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படையின் போர் விமானங்களான Su-30 MKI மற்றும் இரண்டு C-17 போக்குவரத்து விமானங்கள் எகிப்தின் மேற்கு விமானத் தளத்தை சென்றடைந்திருக்கின்றன. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துதல் ஆகியவையாகும். முதல் 2 வாரங்களில் எகிப்தின் F-16, MiG-29 மற்றும் ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன.

இது ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தனது பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்க எகிப்து ஒரு முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. அதாவது, எகிப்து நாடானது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவை இணைக்கும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. மேலும், செங்கடல் வழியாக சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைக்கடல் பகுதியை இணைக்கும் முக்கிய இடமாகவும் உள்ளது. ஆகவே, ஆப்பிரிக்க நாடுகளில் பாதுகாப்பு, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் எகிப்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


Share it if you like it