இந்தியாவில் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், 257 கட்சிகள் செயல்படாதவை என்றும் அறிவித்திருக்கிறது. தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் 86 அரசியல் கட்சிகளையும் சேர்த்து, பதிவு ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்திருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29A-ன் கீழ், சில சலுகைகளைப் பெற வேண்டும் எனில், கட்சியை பதிவு செய்ய வேண்டும். அதேபோல, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலகப் பணியாளர்கள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தாமதமின்றி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில், இந்திய தேர்தல் கமிஷனில் மொத்தம் 2,796 கட்சிகள் பதிவு செய்திருக்கின்றன. எனினும், இவற்றில் 623 கட்சிகள் மட்டுமே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கின. அதேசமயம், தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, அங்கீகாரம் பெறாமல் 2,000-த்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தன. இக்கட்சிகளின் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி பல்வேறு கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்து வருகிறது.
அந்த வகையில், பல்வேறு புகார்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது போன்ற காரணங்களால், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகள் உடனடியாக நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆகவே, 1968 தோ்தல் சின்ன நடைமுறையின் கீழான பலன்களை இக்கட்சிகள் இனி பெற முடியாது. மேலும், பீகாா், டெல்லி, கா்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகள் செயல்படாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட இந்த 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், எந்தவித பலனும் பெற முடியாது.
இதில், தமிழ்நாட்டில் நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், சிவகாமி ஐ.ஏ.எஸ்ஸின் சமூக சமத்துவப் படை உள்ளிட்ட சில கட்சிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.