உலகில் தனக்கான சரியான இடத்தை நோக்கி இந்தியா நகர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “அமெரிக்க மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட வலுவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. மிக உயர்ந்த, ஆழமான, பரந்துபட்ட தகுதியை இந்தியா கொண்டிருக்கிறது. எந்த நாட்டையும் இந்தியா மாற்றுவதாக நாங்கள் பார்க்கவில்லை. உலகில் தனக்கான சரியான இடத்தை பெறுவதை நோக்கி இந்தியா செல்கிறது என்பதாகவே பார்க்கிறோம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய உறுப்பினர்கள் குறித்து புதிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இருக்க வேண்டுமா என்பது குறித்து உலகம் கேட்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான். அதனால்தான், எனது சிந்தனை, செயல்முறை, நடத்தை, எனது நாட்டின் பண்புகள் மற்றும் மரபுகளால் ஈர்க்கப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து நான் எனது பலத்தைப் பெறுகிறேன்.
ரஷ்யா – உக்ரைன் போரை பொறுத்தவரை, அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். தூதரகம் மற்றும் உரையாடல்கள் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, போர் மூலம் அல்ல. நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் என்பதில் உலகம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது. அமைதிக்காக இந்தியா, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் அனைத்து உண்மையான முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.
சீனாவுடனான இருதரப்பு உறவு மேம்பட, எல்லை பகுதிகளில் அமைதி நிலவுவது அவசியம். இறையாண்மைக்கு மதிப்பளித்தல், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தல், சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்தல், வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றில் எங்களுக்கு முக்கிய நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.