நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்தவ சமூகத்தினரை சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபல இந்திய தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜும் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை பாராட்டி சுருக்கமான உரை நிகழ்த்தினார்.
அஞ்சு பாபி ஜார்ஜ் கூறும்போது, “ஒரு தடகள வீராங்கனையாக கடந்த 25 வருடங்களாக எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகப்படியான மாற்றங்களைக் காண்கிறேன். நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற பிறகு, நான் கணிசமான மாற்றங்களைக் கண்டேன். நீங்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடிய விதம் என்னை மிகவும் பொறாமைப்பட வைத்தது. விளையாட்டுக்கான தவறான காலகட்டத்தில் நான் இருந்ததாக உணர்கிறேன். இப்போது, நாட்டில் விளையாட்டு பற்றி தீவிரமான விவாதம் நடைபெற்று வருகிறது. ‘கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா’ பிரச்சாரங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா உடற்தகுதியைத் தழுவி, விளையாட்டில் முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எங்கள் காலத்தில், விளையாட்டு வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். இப்போது பல வீரர்கள் உள்ளனர். உங்கள் தலைமையின் காரணமாக இது நடந்தது. பெண்களுக்கு அதிகாரம் என்பது வெறும் வார்த்தையல்ல. இந்திய பெண்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தயாராகி வருகிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஒலிம்பிக்கிற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டோம், அதற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன,” என்று அஞ்சு பாபி ஜார்ஜ் மோடி அரசாங்கத்தையும், விளையாட்டை வளர்ப்பதிலும் இளம் விளையாட்டு வீரர்களை அவர்களின் வளரும் ஆண்டுகளில் வழிநடத்துவதிலும் கவனம் செலுத்துவதைப் பாராட்டினார்.
2003 பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜ் சாதனை படைத்தார். நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 6.70 மீட்டர் பாய்ந்து பதக்கத்தை வென்றார்.
மேலும் இவர் 2002 இல் அர்ஜுனா விருதும், 2003 இல் கேல் ரத்னா விருதும், 2004 இல் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியை பாராட்டிய அவர், இந்தியாவில் பெண்கள் இனி எந்த பயமும் இல்லாமல் கனவு காணலாம் என்றார். “ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் கனவு காணத் தயாராக உள்ளனர், அவர்களின் கனவுகள் ஒரு நாள் நனவாகும் என்பதை அவர்கள் அறிவார்கள்,” என்று அவர் கூறினார்.