இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ, இரு நாடுகளும் சிறந்த நண்பர்கள் என பேசியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின்பேரில், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ , காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் ராஷ்டிரபதி பவன் வந்த அவருக்கு ஜனாதிபதி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட்டது.
பின்னர் வில்லியம் சாமோய் ரூடோ கூறியதாவது: இந்தியாவும், கென்யாவும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கென்யா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், 1948ல் இருந்தும் வெவ்வேறு நிலைகளில் இரு நாடுகளும் ராஜதந்திர ஈடுபாட்டை கொண்டிருந்தோம். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ளேன். கென்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
கிராமப்புற வளர்ச்சியில், குறிப்பாக விவசாயத்தில் கூட்டுறவை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ஆலோசிக்கிறோம். விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் தயாரிப்பில் எவ்வாறு பங்கு பெறலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இந்த சிறந்த நாட்டிலிருந்து, குறிப்பாக டிஜிட்டல் ஸ்பேஸ் பற்றி நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இதனால் டிஜிட்டல் ஸ்பேஸ் குறித்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்.
டிஜிட்டல் ஐடி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், அரசு சேவையை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் இயல்பை மேம்படுத்துதல், இந்தியா மிகச் சிறப்பாகச் செய்திருப்பது போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள கென்யாவிலிருந்து எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.