ஐ.டி. துறை தொடர்பான பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும். மேலும், இன்னும் இரண்டாண்டு காலத்துக்கு முதலீட்டாளர்கள் மிகவும் கவனமுடன் முதலீடு செய்ய வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாகவே ஐ.டி. துறை பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கா மற்றும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை. அதேசமயம், நீடித்துவரும் ரஷ்யா – உக்ரைன் போர் மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உலக அளவில் பல நாடுகளில் ஒரு வகையான தேக்க நிலை நிலவி வருகிறது. கொரோனா காரணமாக ஏற்பட்ட நெருக்கடி, இன்னும் முற்றிலும் விலகாத நிலையில், போர் மேலும் நெருக்கடியை கூட்டி இருக்கிறது.
நிகழாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததைவிட குறைந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக, சந்தையில் முன்னணி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்.என்.டி. இன்போடெக் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேபோல, நமது சந்தையில் உலக முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் பெருமளவில் தங்கள் முதலீட்டை பேங்கிங் மற்றும் ஃப்னான்சியல் இன்ஸ்டிரக்ஷன்ஸ், உட்கட்டமைப்பு துறைகளிலும், மோட்டார் வாகன துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
ஐ.டி. துறையை பொறுத்தவரை இந்த நிலையற்ற தன்மை மேலும் ஓரிரு காலாண்டு நீடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, முதலீட்டாளர்கள் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு முன்னணி நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் பட்சத்தில் நல்ல லாபம் அடைய வாய்ப்புள்ளது.