22-வது இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் எம்.கருணாநிதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
21-வது சட்ட ஆணையத்தின் பதவிகாலம் 2018 ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. இதன் பிறகு, 22-வது சட்ட ஆணையம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. பின்னர், 2020-ல் 22-வது சட்ட ஆணையம் அமைப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்படவில்லை. இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 22-வது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அறிவித்திருக்கிறது. இதன் தலைவராக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா, ராகா ஆர்யா, மதுரை உயர் நீதிமன்ற கிளையின் மூத்த வழக்கறிஞர் எம்.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த 5 உறுப்பினர்களில் மா.கருணாநிதி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை பூர்வீகமாகக் கொண்டவர் மாரியப்பன் மகன் கருணாநிதி. 1995-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். பின்னர், கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்து வருகிறார். மதுரையில் மூத்த வழக்கறிஞராகத் திகழும் கருணாநிதி, தமிழ்நாடு அரசின் க்யூ பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவின் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தற்போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பல சட்டக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் கருணாநிதி, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி, தமிழ்நாடு காவல்துறை அகாடமி மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களிலும் பல்வேறு தலைப்புகளில் சட்ட விரிவுரைகளை நிகழ்த்தி இருக்கிறார்.