நாடு முழுவதும் 5 கோடி இளைஞர்களுக்கு 3.25 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நாராயணசுவாமி தலைமை வகித்து, 103 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசியபோது, “வேலைவாய்ப்பு, தொழில்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முனைப்புக் காட்டி வருகிறது. ‘ஸ்டார்ட் அப், மேக் இன் இந்தியா’ திட்டங்களின் கீழ், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறையில் 65 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த தளவாடங்கள், தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதோடு, ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. ‘முத்ரா’ திட்டத்தில் 5 கோடி இளைஞர்களுக்கு 3.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தில் புதிய நிறுவனங்கள் துவக்க 25,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. தெருவோர வியாபாரிகளுக்கு, 31 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சமூக நீதித்துறை வாயிலாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளில் பயில கடன் வழங்கப்படுகிறது.
தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் 1989-ல் உருவாக்கப்பட்டிருந்த போதும், மானிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது மானிய திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். விரைவில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரக்கு போக்குவரத்து சார்ந்து கடன் மற்றும் மானியம் அளிக்கவிருக்கிறோம். சேவை மற்றும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் தீவிரப்படுத்தி இருக்கிறார்” என்றார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் செல்வகுமார், மேற்குமண்டல அஞ்சல்துறை தலைவர் சுமிதா அயோத்யா, தமிழ்நாடு வட்ட தலைமையக இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.