நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பயங்கரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல், பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைக் கொலை செய்தல், முக்கிய நபர்கள் மற்றும் இடங்களை குறிவைத்து வெடிபொருட்கள் சேகரிப்பு, இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்குடன் செயல்படும் குழுவினருக்கு ஆதரவு மற்றும் பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற விவகாரங்களில் பி.எஃப்.ஐ.க்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, மதம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக பி.எஃப்.ஐ., அதன் இணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்கம், பீகார், மணிப்பூர் ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்தது. என்.ஐ.ஏ. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்.ஐ.ஏ., இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக கேரளாவில் 19 பேரும், தமிழகத்தில் 11 பேரும், கர்நாடகாவில் 7 பேரும், ஆந்திராவில் 4 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், உ.பி. மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவரும் என மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சென்னை உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தில் காலை 3.30 மணி முதல் 8.45 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, மதுரை, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை நடந்தது. தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன்பட்டியில் உள்ள மதரஸாவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கட்சி அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃ்ப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் அதிகாரிகள் இஸ்மாயிலை விசாரணைக்காக தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து ஒப்பனக்கார வீதியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் பயாஸ் அகமதுவிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவரை பூந்தமல்லி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். மதுரையில் கோரிப்பாளையம், நெல்பேட்டை, வில்லாபுரம், யாகப்பாநகர் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் எம்.மொஹமத் அலி ஜின்னா, மொஹமத் யூசுஃப், ஏ.எஸ்.இஸ்மாயில், சையத் ஷாக், வழக்கறிஞர் காலித் மொஹம்மத், ஏ.எம். இத்ரிஸ், மொஹமத் அபுதாஹிர், எஸ்.காஜா மொஹிரின், எஸ்.யாசர் அராஃபத், பரகதுல்லா, ஃபயாஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தவிர, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ. அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவரும் நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலர், தேசிய புலனாய்வு அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இதனிடையே, என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து இன்று கேரளாவில் முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்த பி.எஃப்.ஐ. அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் வசிக்கும் பகுதிகளில் கடைகள் திறந்தே இருந்தன. மேலும், பந்த்தை மீறி அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், கடைகளை அடித்து நொறுக்கியதோடு, பஸ்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பல பஸ்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல, கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் பஸ்களும் இயக்கப்படவில்லை. கேரளாவில் பஸ் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்களை இயக்கினர். இந்த சூழலில், பி.எஃப்.ஐ.யின் இந்த பந்த் மற்றும் வன்முறை தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ‛பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை நடக்கிறது. அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி, வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை மாநில அரசு தடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.