இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் ஆயுதம், வெடிபொருள், போதைப்பொருள் கடத்துபவர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல எல்லை பாதுகாப்புப் படை அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ. தொலைவுக்கான பகுதியை எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப் பொருட்கள் ஆகியவை கடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பல ஆண்டுகளாகவே நேரடி பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அமிர்தசரஸ், தான் தரன், பெரோஸ்பூர், குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ட்ரோன்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால், எல்லை பாதுகாப்புப் படையினர் ட்ரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நிகழாண்டு மட்டும் பஞ்சாப் எல்லை பகுதியில் 150 ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், இவற்றில் 10 ட்ரோன்களை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் மட்டும் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 ட்ரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற சட்டவிரோத சக்திகளும், கடத்தல் கும்பலும் அதிநவீன சீன ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர். இவை மிகக்குறைந்த ஒலியில் மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. இவை பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனவே, இதற்கு தீர்வு காண ட்ரோன் மூலம் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பாக துப்பு கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பாதுகாப்பு படை அறிவித்திருக்கிறது. மேலும், எல்லையில் கடத்தலில் ஈடுபடும் நபர்களை சுட்டு வீழ்த்தவும் பாதுகாப்பு படையினர் முடிவு செய்திருக்கின்றனர்.