நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை 40 சதவிகிதம் குறைக்கவும், தமிழகத்தில் 60 சதவிகிதம் குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 800 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் மத்திய அரசின் சார்பாக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த கட்டணத்தை அரசு வசூல் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் அதிகரித்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க ‘ஃபாஸ்ட் டேக்’ போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியது. எனினும், சுங்கக் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில்தான், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை 40% வரை குறைக்கவும், தமிழகத்தில் செயல்பட்டுவரும் 9 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 60% வரை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.