இந்தியாவில் யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பணமில்லாத சமூகத்தை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.
இந்தியாவில் 20-ம் நூற்றாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கியது. அதாவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளில் தொடங்கிய இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது மொபைல் ஆப்கள் மற்றும் யு.பி.ஐ. இன்டர்நெட் பேங்கிங் வசதியில் வந்து நிற்கிறது. எனினும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை விட தற்போது யு.பி.ஐ. மூலம் பரிவர்த்தனை செய்வதுதான் பேஷனாக மாறி இருக்கிறது. இதனால், யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்த இந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை, தற்போது சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும் யு.பி.ஐ. பரிவர்த்தனை விகிதம் 650 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில்தான் யு.பி.ஐ. பரிவர்த்தனை அதிகரித்தது என்றால் மிகையாகாது.
இது தொடர்பாக, பே நியர் பை (PayNearby) என்கிற நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில், 2022-ம் ஆண்டில் நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சில்லறை விற்பனை கவுன்ட்டர்கள் மூலம் நடந்த நிதி பரிவர்த்தனைகளின் மதிப்பு 25 சதவிகிதமும், பரிவர்த்தனை அளவு 14 சதவீதமும் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், மைக்ரோ ஏ.டி.எம்.கள் மற்றும் எம்.பி.ஓ.எஸ். கருவிகளுக்கான தேவை 25 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், நிதி நிறுவனங்கள் மற்றும் என்.பி.எஃப்.சி.களுக்கான இ.எம்.ஐ. வசூல் 200 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. எனினும், ஒரு பரிவர்த்தனையின் சராசரி ரொக்கப் பெறுதலில், 2021-ல் ரூ.2,620-ல் இருந்து 2022-ல் ரூ.2,595 ஆக குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. யு.பி.ஐ. பரிவர்த்தனை அதிகரிப்பு என்பது நுகர்வோரின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே குறிக்கிறது என்றஉம், அதிகமான மக்கள் தங்கள் வங்கி மற்றும் வாழ்க்கை முறை தேவைகளுக்காக டிஜிட்டல் வழிமுறைகளை பின்பற்றி முறையான பொருளாதாரத்தில் இணைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.