உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் 19,132 அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் இருக்கின்றன. இவற்றில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 16,500 மதரஸாக்கள் அரசு நிதியுதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. தவிர, அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக இருக்கும். இந்த மதரஸாக்களில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு, பிரார்த்தனையாக தரானா எனும் உருது மொழி இஸ்லாமிய பாடல் பாடப்படுகிறது. இதையும், 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மட்டுமே பாடுவார்கள். மற்ற வகுப்பில் உள்ளவர்கள் நேரடியாக தங்கள் வகுப்பறைக்குச் செல்வது வழக்கம். மற்றபடி, சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய நாட்களில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. அதேசமயம், பொதுவான மாணவர்கள் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், மதரஸாக்களிலும் தேசிய கீதம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில மதரஸா கல்வி வாரியம் இன்று வெளியிட்ட உத்தரவில், “ரம்ஜான் விடுமுறை முடிந்து திறக்கப்படும் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும். இந்த உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட, உதவிபெறும் மற்றும் உதவி பெறாத அனைத்து மதரஸாக்களுக்கும் பொருந்தும். மார்ச் 24-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காலையில் வகுப்பு தொடங்கும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்படும். தேசிய கீதம் முடிந்ததும் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வார்கள். மேலும், இந்த உத்தரவை நிறைவேற்ற மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியத்தின் பதிவாளர் எஸ்.என்.பாண்டே, மே 9-ம் தேதியன்று அனைத்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதுகுறித்து சிறுபான்மையினர் நலன், முஸ்லிம் வக்ஃப் மற்றும் ஹஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், “மதரஸா மாணவர்கள் அனைவரும் தேசபக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதற்காகவே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.