இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்து விட்டதா என்பதுதான் பட்டிமன்றம் நடத்தாத குறையாக தமிழகத்தில் நேற்றிலிருந்து விவாதிக்கப்படும் விவகாரம். இதைப் பற்றிய ஒரு விரிவான அலசல்தான் இந்த கட்டுரை.
இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரசு அமீரகம் (UAE) தடை விதித்திருப்பதாக நேற்றிலிருந்து செய்திகள் உலா வருகின்றன. இதையறிந்த ஒரு தரப்பினர், முகமது நபியை பற்றி அவதூறாக பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷரமா பேசியதால்தான் இந்திய கோதுமைக்கு யு.ஏ.இ. தடை விதித்து விட்டதாக குதூகலிக்கிறார்கள். மேலும் சிலரோ, முஸ்லீம்களுக்கு ஆதரவாக எப்படி தடைவிதிக்கலாம் என்று குமுறி வருகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை நிலவரமே வேறு.
இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் இருந்துதான் அதிகளவில் கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை தொடர்பான பொருள்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், மே மாதம் 13-ம் தேதி திடீரென கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து விட்டது. ஆகவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியோ மற்றும் மறு ஏற்றுமதியோ செய்யத்தான் 4 மாத காலத்திற்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக அந்நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 13-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதி கிடைத்தப் பிறகு மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.
அதாவது, உக்ரைன் போர் மற்றும் குரங்கு அம்மை உள்ளிட்ட விவகாரங்களால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டுதான், இந்த கோதுமை ஏற்றுமதி தடை முடிவை எடுத்திருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமீரகத்தையும், இந்தியாவையும் இணைக்கும் திடமான உறவுகளைப் பாராட்டும் வகையிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.
உண்மை இப்படி இருக்க, முகமது நபியைப் பற்றி பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா பேசியதால்தான் இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரசு அமீரகம் தடை விதித்திருப்பதாக, ஒரு கும்பல் பொய்ப் பரப்பி வருகிறது. இதனால், தேச விரோத கும்பல் குதூகலித்து வருகிறது. அதேசமயம், தேச நல விரும்பிகளோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு நாட்டையே ஐக்கிய அரபு அமீரகம் பகைத்துக் கொள்வதா என்று குமுறி வருகிறார்கள். ஆகவே, கோதுமை விவகாரத்தில் நடந்த உண்மை இதுதான். ஆகவே, இதற்காக யாரும் குதூகலிக்க வேண்டாம், யாரும் குமுறவும் வேண்டாம்.