சென்னை சேத்துப்பட்டில் உள்ள உதவிபெறும் கே.டி.சி.டி. தொடக்கப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துக்கொண்டார். பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி அவர்கள், பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கியது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் வளர்ந்து வரும் புதிய பாரதத்தில் இளம்பெண்கள் உள்பட இளைஞர்களுக்கு உள்ள முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளையும், தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்சக்திக்கு உள்ள முக்கிய பங்கையும் குறித்து எடுத்துரைத்தார். 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை எட்ட ‘பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி’ என்ற பிரதமரின் அழைப்பை எடுத்துக்காட்டும் வகையில், துணிச்சலுடன் தொழில்களை தேர்வு செய்யவும், அவர்களின் முழுத் திறனை பயன்படுத்தவும், ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்கவும், தைரியம், திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் மாணவிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களை ஆளுநர் வலியுறுத்தினார். 2047 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் கொண்டாடும்போது நமது நாடு வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பேசினார்.
மேலும் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் வங்கிக்கணக்கை இந்தியாவில் சுமார் 10 ஆண்டுகளில் 53 கோடி பேர் வங்கி கணக்கை துவங்கி அந்த திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1.2 கோடி பேர் முத்ரா கடன் திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் தேசிய கல்வியோடு ஒப்பிடும்போது மாநில கல்வி மிக மோசமாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தால் நமது நாட்டின் கனவை அடைய முடியும் என்று பேசினார்.