90 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு இது பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்காக ராணுவத்தின் விமானப்படையானது. ஆண்டுதோறும் அக்டோபர் 8 ம் நாளில் இந்திய விமானப்படை தனது நிறுவன நாளை கொண்டாடுகிறது. நேற்று அக்டோபர் 8 ல் இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் கோலாகலமாக எல்லா தளங்களிலும் உற்சாகத்துடன் தனது விமானப்படை தினத்தை கொண்டாடியது. 91 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்திய விமானப்படையில் மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக விமானப்படையின் சின்னத்தில் பாரத தேசத்தின் தேசியக்கொடியும் கருடன் பறவை சின்னமும் இந்திய விமான படையின் இலட்சனையாக சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக நமது தேசியக்கொடி முப்படைகளிலும் பொதுவாக பதிக்கப்படுவது என்றாலும் முப்படைகளிலும் தனியாக சின்னங்கள் அடையாளங்கள் உண்டு. அந்த வகையில் இந்திய விமானப்படைக்கு பறவைகளின் ராஜாவாக யுத்த பறவையாக குறிப்பிடப்படும் கருடன் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றி வாசகமாக வாய் சேனா என்னும் தாரக மந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழக்கத்தில் இருந்த சிம்மத்தூண் அடையாளத்தோடு தேசியக்கொடி தேசத்தின் யுத்த பறவையான கருடனின் உருவம் ஆகாயத்தில் பறந்து போரிட்ட பாரதத்தின் முன்னோடியான அனுமனை குறிக்கும் வாய் சேனா என்னும் தாரக மந்திரத்தோடு புது பொலிவோடும் உற்சாகத்தோடும் விமானப்படை மெருகேறியதை பாரதம் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கொண்டாடுகிறது.
இந்த வாயு சேனா என்னும் தாரக மந்திரம் பாரதத்தின் பழமையான தேவ பாஷையில் குறிப்பிடப்படும் வார்த்தையாகும். ரஃபேல் அப்பாச்சி உள்ளிட்ட நவீன ரக புதிய வரவுகளை எல்லாம் இந்திய விமானப்படையில் இணைக்கும் போது பழமையான பாரத தர்மத்தின் அடிப்படையில் வெற்றிக்கான திலகம் இட்டு மரபுப் படி பூஜைகள் செய்யப்பட்டே அவை விமானப்படைக்கு அர்பணிக்கப்பட்டது. அப்போதே மத்திய அரசின் மீது மதம் சார்ந்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. ஆனால் இவை யாவும் யுக யுகமாக இந்த மண்ணில் பின்பற்றி வரும் மரபுகளும் மரபு வழி அடையாளங்களும் தான் என்பதை பேசுவதற்கு இங்கு எந்த ஊடகமும் தயார் இல்லை.
தற்போது கருடன் என்னும் ராஜ பறவை யுத்தத்தின் அடையாளம் வாய் சேனா என்னும் வடமொழி வார்த்தை அத்தனைக்கும் சேர்த்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகள் விமர்சனங்கள் முன்வைக்க எதிர்க்கட்சிகள் கட்சை கட்டி வரும். பாரத தேசம் முழுவதிலும் எல்லைக்கு உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும் விமானப்படை தளங்களில் எல்லாம் இனி இந்த அடையாளங்கள் பட்டொளி வீசி பறக்கும். அது தமிழகத்தில் இருக்கும் பல்வேறு விமானப்படை விமான தளங்களிலும் நுழைவாயில்களிலும் கூட புதுப்பொலிவுடன் மிளிரக்கூடும். ஏற்கனவே இந்தி எதிர்ப்பு தேசிய எதிர்ப்பு மனநிலையில் மத்திய அரசின் மீது வன்மத்தில் இருக்கும் கோஷ்டிகள் எல்லாம் இனி விமானப்படை வளாகங்களில் முன்பு வைக்கப்படும் இந்த விவகாரத்தையும் சர்ச்சையாக்க கூடும்.
ஆனால் பொது மேடைகள் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே இந்த சர்ச்சைகளை கிளப்ப முடியும். மாறாக போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று வழக்கமான நினைப்பில் யாரேனும் விமானப்படை வளாகங்களை நெருங்கினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகும். போராளிகளும் ஆர்வலர்களும் அதை மனதில் வைத்துக் கொண்டு நிச்சயம் பாதுகாப்பான வழியிலேயே தமிழ் தமிழர் கோஷத்தை முன்னெடுப்பார்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஜெண்டாவும் பயிற்சியும் அப்படித்தான்.
உலகில் எவ்வளவோ விமானப்படை விமானங்கள் உண்டு. அவை யாவும் பெரும்பாலும் போர் பங்களிப்புகளை அதிக அளவில் வழங்கி இருக்கும். எப்போதாவது அபூர்வமாக உள்நாட்டு மக்களை வெளிநாடுகளில் இருந்து மீட்கவும் இயற்கை பேரிடர் உழைத்த விவகாரங்களில் மீட்பு பணிக்களுக்காகவும் பொது பங்களிப்பை வழங்கி இருக்கும். ஆனால் இந்த உலக விமானப்படையின் மரபிலிருந்து பாரதத்தின் விமானப்படை முற்றிலும் மாறுபட்டது. பாரதத்தின் விமானப்படை யுத்தத்திற்காக வானில் பறந்ததை விட உள்நாட்டு மக்கள் வெளிநாட்டு மக்களின் நலன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பங்களிப்பை வழங்கியதே அதிகம். அவ்வகையில் இவ்வுலகில் எந்த ஒரு நாட்டு விமானப்படைக்கும் இல்லாத கௌரவம் மரியாதை பாரதத்தின் விமான படைக்கு எப்போதும் உண்டு.
பாரதத்தின் விமானப்படை சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு யுத்தம் தொடங்கிய காலத்தில் இந்திய ராணுவத்திற்கு உதவியாக களம் கண்ட வெற்றி வரலாறு உண்டு. கார்கில் யுத்தத்தின் போது இந்திய இராணுவம் துணையாக விமானப் படை வழங்கிய பங்களிப்பு யுத்தத்தின் போக்கையே மாற்றி அமைத்தது.
அண்டை நாடான தற்போதைய வங்கதேசத்தின் விடுதலைப் போரில் மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியது இந்திய விமானப்படை. அவ்வகையில் வங்கதேசம் விடுதலைக்கு இந்திய விமானப்படை கப்பற்படை ராணுவம் உலகப் படைகள் வழங்கிய பங்களிப்பு அபரிமிதமானது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ சமயங்களில் இந்திய விமானப்படை இலங்கையில் பெரும் நெருக்கடியில் இருந்த மக்களுக்கு உணவு மருந்து பொருட்களை சுமந்து சென்றது.
அண்டை நாடுகளான நேபாளம் பூட்டான் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பேரிடர்கள் நேரிடும் போதும் உள்நாட்டு சிக்கல் தோன்றும் போதும் அம் மக்களுக்கு உணவு மருந்து பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதில் இன்றளவும் முன்னிற்பது இந்திய விமானப்படை. குறிப்பாக பெரும் சிக்கலும் சவாலும் நிறைந்த தட்பவெப்பம் கொண்ட நேபாளத்தில் மலை பாங்கான பிரதேசங்களில் மிக மோசமான சீதோஷணம் நிலவும் காலங்களில் பாரதத்திலிருந்து ஆன்மீக சுற்றுலா சுற்றுலா போகும் பயணிகளில் பாதுகாப்பதிலும் அசாதாரண சூழல்களில் அவர்களை மீட்டெடுப்பதில் இந்திய விமானப் படையின் தினசரி பங்களிப்பு போற்றுதலுக்குரியது.
சர்வதேச அளவில் துருக்கியின் பூகம்பம் ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் பாகிஸ்தானின் அசாதாரண சூழலாகட்டும் எதுவாக இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சுமந்து செல்வதில் முதலிடம் பிடிப்பது இந்திய விமானப்படையே. வல்லரசுகள் கூட என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ரஷ்யா உக்ரைன் யுத்த களத்தில் இரு நாடுகளிலும் சிக்கித் தவித்த பாரதியர்களை மீட்க புறப்பட்டு போனது இந்திய விமானப்படை. இந்தியர்களை மட்டுமன்றி மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் வங்கதேசம் மாலத்தீவு உள்ளிட்ட மாணவர்களையும் மீட்டெடுத்த நீங்கா பெருமைக்குரியது. இந்திய விமானப்படை.
பாரதத்தை வன்மத்தோடு சீண்டிப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த துருக்கி பூகம்பத்தில் சிதைந்த ந போது ஆஃபரேஷன் தோஸ்த் என்ற நடவடிக்கையின் மூலம் அம்மக்களை பெரும்பாலானவர்களை உயிருடன் மீட்டெடுத்த பெருமையில் இந்திய ராணுவத்தோடு இந்திய விமான படையின் பங்கும் அளப்பரியது. ஆஃபரேஷன் காவிரி என்ற பெயரில் தெற்கு சூடானின் அபாயகரமான சூழலில் விமானப்படை ஓடுதளமும் விமான நிலைய கட்டுப்பாடு கண்காணிப்பு கூட இல்லாத அசாதாரண சூழ்நிலை சாதாரணமாக எதிர்கொண்டு அங்குள்ள இந்தியர்களை இரவோடு இரவாக பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த அசகாய சூரர்களைக் கொண்டது பாரதத்தின் விமானப்படை.
அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஐரோப்பா யூனியன் என்று எந்த ஒரு வல்லரசு நாட்டிற்கும் சற்றும் நாங்களும் எங்களின் விமானப்படையும் சளைத்தவர்கள் அல்ல. எனும் மிடுக்கோடு எந்நேரமும் எதற்கும் தயாராக களத்தில் துணிந்து நிற்பது பாரதத்தின் விமானப்படை. எத்தனையோ இழப்புக்கள் இடர்பாடுகள் நெருக்கடிகளைக் கடந்து கூட எந்நேரமும் உயிரை துச்சம் ஆக்கி தேசத்தின் மக்களை எல்லைகளை பாதுகாப்பதில் பாரதத்தின் விமானப்படை ஆற்றி வரும் சேவை அளப்பரியது. இந்த தேசத்தின் பாதுகாப்பில் அவர்களின் பங்களிப்பை நன்றியோடு நினைவு கூறுகிறது. 91 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாரதத்தின் வான்படை காவலர்களான விமானப்படை வீரர்களுக்கு தேசம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் பரிமாறிக் கொள்கிறது. அவர்களின் நலனுக்காகவும் வெற்றிக்காகவும் எப்போதும் தேசம் பிரார்த்தனை செய்வதை இந்நாளில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.