எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என்று மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது அதிநவீன ஐ.என்.எஸ். மோர்முகா போர்க்கப்பல்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தினர் அத்துமீறி வருகின்றனர். அதேபோல, இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்க, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவா மாநிலத்தில் பழமையான துறைமுகம் அமைந்திருக்கும் மோர்முகா என்கிற இடத்தில் ஐ.என்.எஸ். கப்பல் தயாரிக்கப்பட்டது. மோர்முகாவில் தயாரிக்கப்பட்டதால், அக்கப்பலுக்கு ஐ.என்.எஸ். மோர்முகா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அதிநவீன போர்க் கப்பல், 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும், 7,400 டன் எடையும் கொண்டது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். இக்கப்பல், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இதன் சிறப்பம் என்னவென்றால், இக்கப்பலில் அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ரேடார் கருவிகள் மூலம், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகளை எளிதில் குறிவைக்க முடியும். மேலும், பிரமோஸ் ஏவுகணை தளவாடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, நீர்மூழ்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களும் இடம்பெறும். இவற்றை ஏவும் வகையில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல, நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் இக்கப்பலில் இடம்பெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, அணு ஆயுதங்கள், உயிரியல் போர்முறையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய கப்பற்படையில் உள்ள எதிரிகளை தாக்கி அழிக்கும் மிகப்பெரிய கப்பல்களில் மோர்முகாவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தக் கப்பலைத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் வைத்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “மோர்முகா கப்பல் தற்போதைய தேவைகளை மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும். உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு மோர்முகா கப்பல் ஓர் எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா கப்பல்களை கட்டிக் கொடுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தத்தில் மோர்முகா கப்பல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.