இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு, இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது’ என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த கருத்தரங்கில், சக்திகாந்த தாஸ் பேசியதாவது: சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், உத்தரவாதம் இல்லாத கடன்கள் வாங்குவது குறைந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கலாம். தற்போது சீராக உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது 29 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த நிதியாண்டில், சிறப்பாக செயல்பட்ட வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. சவால்கள் மற்றும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த மூலையிலிருந்தும் பிரச்னைகள் உருவாகும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.