அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் மீதமுள்ள 6 மாத கால நிர்வாகத்தின் முன்னுரிமைகள் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் எடுத்துரைத்தார். அதில் அவர் பேசியதாவது : நாங்கள் முக்கியமாக எங்கள் நட்பு நாடுகளுடன் கூட்டாட்சி தன்மையை விரிவுபடுத்துவதையும், இதனால் அமெரிக்க மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாங்கள் மிகவும் வளமான மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்புகிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை உலகின் மிக முக்கியமான ஒன்றாக கருதுவதாக அவர் கூறினார். க்வாட் மற்றும் அமரிக்க -இந்தியா முன்முயற்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உட்பட எங்களின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
முன்னதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள வினய் மோகன் குவாத்ரா அமெரிக்காவின் தலைநகருக்கு வந்தடைந்தார். அடுத்த 90 நாட்களில், இந்தியாவும் அமெரிக்காவும் சில உயர்மட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாஷிங்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அரசு பயணத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டதாக அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.