கார்கில் போர் வெற்றி தினம் இன்று (ஜூலை 26) கடைபிடிக்கப்படுகிறது. 22 ஆண்டுகளுக்கு முன் தனது உயிரை துச்சமென மதித்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டுக்கு பரிசளித்தனர் நமது ராணுவ வீரர்கள். அந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் கார்கில் போர் நினைவிடத்தில் இதனையொட்டி ஆண்டுதோறும் விழா நடைபெறும்.
1998-1999 குளிர்காலத்தில், பாகிஸ்தானிய ஆயுதப் படைகளின் சில பிரிவுகள் ரகசியமாக பரதத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக பாரதத்தில் ஊடுருவினர். பல பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள், முஜாஹிதீன்களின் போர்வையில் அனுப்பப்பட்டனர். இந்த ஊடுருவல் “ஆபரேஷன் பத்ர்” என்று அழைக்கப்பட்டது.
1999 மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இரண்டு நாடுகளிலும் இந்த போர் காரணமாக நூற்றுக்கணக்கான நமது வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கார்க்கில் போர் நடக்கும் போது உலக நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன. அதேபோல் பாகிஸ்தான் உடன் பாரதத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எதற்கும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை.
இந்த போரில் பாரதத்திற்கு ‘ஆபரேஷன் விஜய்’ முதல் வெற்றியை அளித்தது. அதன் பின்பு விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் பாரதம் கைப்பற்றியது. இதனையடுத்த வரிசையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளைக் அடுத்தடுத்து கைப்பற்றியது பாரதத்தின் வீரமிகு ராணுவம்.
ஜூலை மாதம் இரண்டாம் வாரம் கார்கிலின் அனைத்து இடங்களையும் பாரதம் கைப்பற்றியது. இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானிடம் மட்டும் பாரதத்தின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் நமது வலிமையை எடுத்துரைத்தது. அன்று முதல் பாரதம் உலக அரங்கில் முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக மாறியது என்றால் அது மிகை அல்ல.