பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சி நடத்தி வந்தார். அக்கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமாருக்காக கதவுகள் திறந்தே உள்ளதாக லாலு பிரசாத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இண்டி கூட்டணி ஏற்கனவே முடிந்த போன ஒன்று என்றும், அக்கூட்டணிக்கு இந்தியா என பெயரிடுவதை விரும்பவில்லை என்றும், ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் அவர் கூறினார். கூட்டணிக்காக இயன்ற வரை தாம் பணியாற்றியதாகவும், ஆனால் அனைத்தும் தற்போது முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
லாலு பிரசாத் யாதவுடனான உறவு சரியாக அமையவில்லை என்றும், அதனால் தாம் பிரிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.