தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் டெல்லியில் 2 நாள் சர்வதேச திருக்குறள் மாநாடு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகார வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.ஆளுநர்களாக இருக்கும் தமிழர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீஷியஸ், கம்போடியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் முக்கியப் பிரமுகர்களுக்கும் மத்திய வெளியுறவுத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் பல்வேறு நாடுகளின் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர். பல்வேறு மாநில தமிழர்களும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட உள்ளனர். திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இவ்வாறு அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் மீது பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த பற்று கொண்டுள்ளார். தனது நிகழ்ச்சிகளில் திருக்குறளை தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். மத்திய அரசால் திருக்குறள் இதுவரை இல்லாத வகையில் இந்தி, சம்ஸ்கிருதம், அரபி, உருது உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் இந்த நூல்களை பிரதமரே வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது காசி தமிழ்ச் சங்கமத்தில் மேலும் 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் பிரெய்லிமுறையிலான தமிழில் திருக்குறள்உள்ளிட்ட சங்க இலக்கியத்தின் 46 நூல்களையும் வெளியிட்டார். செம்மொழி ஆய்வு நிறுவனத்தால் வெளியான இந்த நூல்களில் ரூ.1 கோடி மதிப்பிலான நூல்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
இவற்றின் பின்னணியில் பாஜகவுக்கான அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இதனால் பலன் கிடைத்து வருகிறது. ஏனெனில், உலக மொழிகளில் தமிழ் பழமையானதாக இருப்பினும் இதை, சம்ஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் அறிஞர்கள் ஏற்றதில்லை. நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஆட்சியிலிருந்த இந்திய அரசுகளும் தமிழை உலகின் பழமையான மொழியாகக் கருதியதில்லை. கடந்த 2022-ல் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமத்தை மத்திய கல்வித் துறை நடத்தியது. இதை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், உலகின் பழமையான மொழி தமிழ் என முதன்முறையாக அறிவித்தார். தொடர்ந்து இதையே அவர் பல அரசு மேடைகளிலும் அறிவித்து அங்கீகரித்து வருகிறார்.