டாலருக்கு பதில் இந்திய ரூபாய்: இலங்கை ரெடி… மொரீஷியஸ் உட்பட 5 நாடுகள் பேச்சுவார்த்தை!

டாலருக்கு பதில் இந்திய ரூபாய்: இலங்கை ரெடி… மொரீஷியஸ் உட்பட 5 நாடுகள் பேச்சுவார்த்தை!

Share it if you like it

சர்வதேச வர்த்தகத்துக்கு டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை சம்மதம் தெரிவித்திருக்கிறது. மேலும், மோரீஷியஸ், தஜிகிஸ்தான், கியூபா, லட்சம்பர்க், சூடான் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. முதலீடுகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால், டாலரின் மதிப்பு உயர்ந்து இதர நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அண்மையில் 80 ரூபாயாக சரிவடைந்தது. எனவே, உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுடனான வர்த்தகத்தை எளிதாக்குவதுடன், சரியும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அதாவது, இந்திய ரூபாயை வாங்கிக் கொள்ளவோ அல்லது இந்திய ரூபாயில் வணிகம் செய்யோ எந்தெந்த நாடுகள் தயாராக இருக்கின்றனவோ அவற்றுடன் ரூபாய் மூலமே பரிவர்த்தனையைச் செய்துகொள்ள இந்தியா முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவை ரஷ்யா வரவேற்றிருக்கிறது. கடும் நெருக்கடியில் உள்ள ரஷ்யா, இனிமேல் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய இந்த நடவடிக்கை உதவும். ரஷ்யா போலவே வேறு சில நாடுகளும் ரூபாயை பெறச் சம்மதிக்கின்றன. காரணம், இந்தியாவிடமிருந்துதான் முக்கியமான சில பொருட்களை அந்நாடுகளால் விலை குறைவாக வாங்க முடியும். மேலும், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்டவையும், ரூபாய் வழியிலான பரிமாற்றத்தை எளிதாகச் செய்ய முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச வணிகத்தில், இப்படி இந்திய ரூபாயை பரிமாறிக்கொள்வதால், இந்தியாவின் கடன் பத்திரச் சந்தை வலுப்படும். இதனிடையே, ரஷ்யா மட்டுமல்ல இலங்கை, ஈரான் போன்ற நாடுகள்கூட இந்திய ரூபாயை ஏற்கத் தயாராக இருக்கின்றன. சர்வதேச வர்த்தகத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை இணங்கி இருக்கிறது. இந்திய ரூபாயை இலங்கையின் வெளிநாட்டு நாணயமாக நியமிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. இலங்கை வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்காக, ஸ்பெஷல் வோஸ்ட்ரோ ரூபாய் கணக்குகள் அல்லது எஸ்.வி.ஆர்.ஏ. எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தக கணக்கை திறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையைத் தொடர்ந்து, மொரீஷியஸ், தஜிகிஸ்தான், கியூபா, லட்சம்பர்க், சூடான் ஆகிய நாடுகளும் சர்வதேச வர்த்தகத்துக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.


Share it if you like it