ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று சொல்லி, போலீஸாரால் தாக்கப்பட்ட ஈரான் பெண் உயிரிழந்திருக்கும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். மேலும், பெண்கள் ஹிஜாப் அணிவது, இஸ்லாமிய சட்டங்கள் உள்ளிட்டவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதை கண்காணிக்க, காவல்துறையில் நெறிமுறை பிரிவு என்றொரு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஹிஜாப், பர்தா, புர்கா அணிவதற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட, ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது இஸ்லாமிய மதகுருமார்களும், போலீஸாரும் தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில்தான், ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று சொல்லி, போலீஸார் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மாஷா அமினி. 22 வயதான இளம்பெண்ணான இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மேற்கு ஈரானின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார். அப்போது, இஸ்லாமிய சட்டங்களை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்று கண்காணிக்கும் நெறிமுறை காவல்துறையினர், மாஷா குடும்பத்தினர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்திருக்கிறார்கள்.
காரில் சென்ற மாஷா உட்பட அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிந்திருந்தார்கள். ஆனால், மாஷா முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி, அவரை கைது செய்த போலீஸார், போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது, போலீஸாருக்கும் மாஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், மாஷாவை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக, மாஷா மயங்கி விழுந்திருக்கிறார். உடனே, அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், மாஷா கோமா நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாஷாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இச்சம்பவம் குறித்த தகவல் ஈரான் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. இதனால், ஆத்திரமடைந்த பெண் உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், மாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, நீதி கேட்டு வந்தனர். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி மாஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பெண் உரிமை ஆர்வர்களின் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. ஹிஜாப் முறையாக அணியவில்லை என்பதற்காக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையைும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.