ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 2 பேரை ஈரான் அரசு பொதுவெளியில் வைத்து தூக்கிலிட்டு கொலை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பெண்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கலாசாரப் பிரிவு என்றொரு காவல்துறை பிரிவை ஈரான் அரசு அமைத்திருந்தது. இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற இளம்பெண், கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக தனது பெற்றோருடன் காரில் வந்தார். அப்போது, தெஹ்ரானில் சோதனையிட்ட சிறப்புப் பிரிவு போலீஸார், மாஷா முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, அவரை தாக்கியதோடு, கைது செய்து காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்திலும் மாஷா மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், அவர் கோமா நிலைக்குச் சென்றார். பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரான் மக்களிடையே குறிப்பாக பெண்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாஷா அமினியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பெண்கள், ஈரான் அரசுக்கு எதிராக கோஷமிட்டதோடு, ஹிஜாப்பை கழட்டி எறிந்தும், எரித்தும், தலைமுடியை கத்தரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்தினர். எனவே, போராட்டக்காரர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு என எவ்வளவோ அடக்குமுறைகளை ஈரான் அரசு கையாண்டது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனாலும், போராட்டம் கைவிடப்படவில்லை.இதனால், ஈரான் அரசு செய்வதறியாது திகைத்தது.
இதையடுத்து, இறங்கி வந்த ஈரான் அரசு, கலாசாரப் பிரிவை கலைப்பதாக அறிவித்தது. இதனால் போராட்டம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிய எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, போராட்டக்காரர்களை அடக்க புதிய யுத்தியைக் கையாண்டிருக்கிறது ஈரான் அரசு. அதாவது, ஹிஜாப் போராட்டத்தின்போது ராணுவத்தினரையும், போலீஸாரையும் தாக்கியதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஒவ்வொருவராக பொதுவெளியில் தூக்கில் போட்டு, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், போராட்டத்தை பரப்பியதாகவும், பாதுகாப்புப் படையினரை கொன்றதாகவும் கூறி 23 வயதான மெஹ்சேன் ஷேக்கரி என்கிற இளைஞரை கடந்தவாரம் தூக்கில் போட்டது. தற்போது, 24 வயதான மஜித்ரேசா என்ற இளைஞரை பொதுவெளியில் தூக்கிலிட்டு மரண தண்டனையைநிறைவேற்றி இருக்கிறது.
ஆனால், ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஈரான் தனது சொந்த நாட்டு மக்களை கண்டு பயப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கின்றன. இதனிடையே, இருவரின் மரணத்துக்கும் நியாயம் வேண்டி சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்வினையை பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மெஹ்சேன், மஜித்ரேசா ஆகியோர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இருவரின் மரணத்தை எதிர்த்து பலரும் சாலைகளில் பேரணி நடத்தினர்.