ஈரானில் பற்றி எரியும் ‘ஹிஜாப்’ விவகாரம்: போலீஸ் தாக்குதலில் 31 பேர் பலி!

ஈரானில் பற்றி எரியும் ‘ஹிஜாப்’ விவகாரம்: போலீஸ் தாக்குதலில் 31 பேர் பலி!

Share it if you like it

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டுப் பெண்கள் ஹிஜாப்புக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தில், போலீஸ் தாக்குதலில் 31 பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான், சுதந்திர நாடாக இருந்தபோது, அந்நாட்டுப் பெண்கள் பிகினி உடை, பீச் குளியல் என எவ்வித கட்டுப்பாடும் இன்றி மிகவும் சுதந்திரமாக வலம் வந்தனர். ஆனால், 1979-ம் ஆண்டு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் வகையிலான துணி அணிவது மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் வகையில் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கபப்ட்டது. இதன் பிறகு, அந்நாட்டுப் பெண்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றத் தொடங்கினர். இதனிடையே, ஹிஜாப் மற்றும் புர்கா அணிவது, முறையாக தொழுகை நடத்துவது ஆகியவற்றை கண்காணிப்பதற்காக, கலாசார காவல்துறை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கலாசார பிரிவு போலீஸார், ஹிஜாப் முறையாக அணியாத பெண்களை கன்னத்தில் அறைவது, லத்தியால் தாக்குவது, அபராதம் விதிப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது என்று ஏக கெடுபிடிகளை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரானின் குர்திஸ்தானிலுள்ள சாகேஸ் பகுதியைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த 15-ம் தேதி குர்திஸ்தானில் இருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். அப்போது, அவர்கள் வந்த காரை சோதனை செய்த கலாசாரப் பிரவு போலீஸார், மாஷா அமினி தலைமுடியை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, அவரை கைது செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், மாஷா அமினிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். மேலும், போலீஸ் வேனில் அழைத்துச் சென்றபோதும், மாஷாவை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். இதில், கோமா நிலைக்குச் சென்ற மாஷா அமினி, கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார். ஹிஜாப்புக்காக இளம்பெண் ஒருவர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால், ஈரானியப் பெண்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். இளம்பெண் மாஷா அமினியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள், ஹிஜாப்பை கழற்றி வீசி எரி்ந்தும், தீவைத்து கொளுத்தியும், தங்களது கோவத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், குர்திஸ்தானில் 18-ம் தேதி தொடங்கிய இப்போராட்டம் நாடு முழுவதும் பரவத் தொங்கியது. ஆவேசமடைந்த பெண்கள், தலைமுடி இருந்தால் தானே அதை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும். எங்களுக்கு தலைமுடியே வேண்டாம் என்று சொல்லி, தலைமுடியை கத்தரித்து எறிந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒன்று திரண்டு ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீவைத்து கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக ஈரானிய ஆண்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால், போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. சாலையில் திரண்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் போலீஸாரின் வாகனங்களை அடித்து உடைத்து, போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீஸாரும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்று வருகின்றனர். ஆனாளும், நாளுக்குநாள் போராட்டம் வலுத்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனால், என்ன செய்வதெனத் தெரியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் இதுவரை 31 பலியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல, பொதுமக்கள் தாக்கியதில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஸ்லோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈரான் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி மோகதம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் முதலில் போராட்டம் துவங்கியது. தற்போது, 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவலின்படி 31 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே, ஹிஜாப் அணிவது மற்றும் இஸ்லாமிய மதநெறிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்கும் ‘கலாசார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.


Share it if you like it