ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆளும் அரசுக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த 15 வயது பள்ளி மாணவி பாதுகாப்புப் படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாய சட்டமாக இருக்கிறது. இதை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஹிஜாப் முறையாக அணியப்படுகிறதா, பெண்கள் இஸ்லாமிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பன போன்றவற்றை கண்காணிக்க அரசுத் தரப்பில் சிறப்பு போலீஸ் படைப் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படையினர் ஹிஜாப் அணியாமலும், முறையாக அணியாமலும் செல்லும் பெண்களை தாக்குவது, அபராதம் விதிப்பது, சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அரசின் இந்த அடக்குமுறையை ஈரான் பெண்கள் துளியும் விரும்பவில்லை. எனவே, அவ்வப்போது அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் மாஷா அமினி, கடந்த மாதம் தங்களது உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் தலைநகர் தெஹ்ரானுக்கு காரில் வந்தார். அப்போது, அவர்களது காரை நிறுத்தி சோதனையிட்ட சிறப்பு போலீஸார், மாஷா முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி, அவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரை போலீஸார் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். அதேபோல, காவல் நிலையத்தில் வைத்தும் மாஷாவை கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில், மூர்ச்சையான மாஷாவை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், மாஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரானில் காட்டுத்தீ போல மளமளவென பரவியது. ஈரான் பெண்கள் கொதித்தி எழுந்தனர். மாஷா உடல் அடக்கம் செய்யப்பட்டுபோது, குர்திஸ்தானே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதுமட்டுமல்ல, பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீவைத்து கொளுத்தியும், தலைமுடி துண்டித்தும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தற்போது நாடுமுழுவதும் விரிவடைந்திருக்கிறது. அரசின் அடக்கு முறையையும் மீறி போராட்டம் அனல் பறந்து வருகிறது. இப்போராட்டத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், போராட்டம் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பள்ளி மாணவிகள் முதல் பல்வேறு தரப்பினரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், ஈரான் அரசுக்கு ஆதரவான பாடலை பாட மறுத்ததாக 15 வயது பள்ளி மாணவி பாதுகாப்புப் படையினரால் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானின் அர்டாபில் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஷாஹீத் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில், பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவிகளிடம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பாடலை பாடும்படி உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால், சில மாணவிகள் பாட மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, பாடல் பாடாத மாணவிகளை பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அஸ்ரா பனாஹி என்கிற 15 வயது மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு ஈரான் ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த படுகொலைக்கு பொறுப்பேற்று ஈரான் கல்வி அமைச்சர் யூசப் நோரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இச்சம்பவத்தால் ஈரானில் நடந்து வரும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் மேலும் வலுவடைந்திருக்கிறது. பெண்கள் ஹிஜாப் துணியை கழற்றி வீசிவருவதோடு, சில பெண்கள் மேலாடையைக் கழற்றி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனித உரிமை ஆணையமும் ஈரான் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.