ஈரான் நாட்டிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கேரள மாநிலம் கொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் இதுவரை குஜராத், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், 6,800 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் நேற்று போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 60 கிலோ போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
ஈரான் நாட்டில் இருந்து 6 கண்டெய்னர்கள் கொண்ட படகில், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேரளா மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, படகில் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட அனைவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. பின்னர், பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய கன்டெய்னர்கள் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சஞ்சய் சிங் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியான அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆய்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆப்கான், பாகிஸ்தான் எல்லை பகுதிகளை ஒட்டி ரோந்து பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் (NCB), இந்திய கடற்படையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், 1,200 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ ஹெராயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டிருக்கிறது. சில போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஸ்கார்பியன் முத்திரையும், மற்றவற்றில் டிராகன் முத்திரையும் இருந்தன. மேலும், நீர் புகாத 7 அடுக்கு பேக்கிங்கிலும் போதைப்பொருள் நிரம்பப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர். மேலும், சரக்குகளை கடலில் வீச முயன்றனர்” என்றார்.
பாகிஸ்தான் படகு பறிமுதல்
இதேபோல, குஜராத் கடற்கரையில் சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையின் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானுக்குச் சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அப்படகை சோதனை செய்ததில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 350 கோடி ரூபாய். படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகிலிருந்த 6 பேரையும் கைது செய்தனர். நிகழாண்டில் மட்டும் இவ்வாறு 6 முறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி நடந்த சோதனையில், பாகிஸ்தான் படகில் இருந்து 240 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.