அறநிலையத்துறை கோவில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யும் திட்டத்தை
உடனடியாக கைவிட வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தமிழக சட்டசபையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கோவிலின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்து கோவிலின் வருவாயை அதிகரிப்போம் என கூறினார்.
அதன்படி பல்வேறு பெரிய கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய தங்கம் உருக்கப்பட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆனைமலை மாசாணியம்மன் கோவில் போன்ற சிறிய கோவில்களிலும் அறநிலையத்துறை இந்த வேலையை செய்கிறது.
சிறிய கோவிலோ பெரிய கோவிலோ பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக
வழங்குகின்ற தங்கத்தை உருக்குவது என்பது அவர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாகும்.
கோடிக்கணக்கில் வருமானம் வரக்கூடிய கோவில்களை அறநிலையத்துறை கையில் எடுத்துக்கொண்டு
அதில் வரும் வருமானத்தை முறையாக பயன்படுத்துவதில்லை. மாறாக தங்கத்தை உருக்குகிறோம் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் கண் கட்டி வித்தை நடத்துகின்றனர். அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல கோவில்களில் சுகாதார வசதிகளே இல்லை .பல கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் சரி செய்ய நிர்வாகத் திறனற்ற அரசு கோவில் நகைகளின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகிறது.உருக்கும் தங்கத்தின் கணக்குகளின் மீது பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
எனவே அறநிலையத்துறை கோவில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யும் திட்டத்தை
உடனடியாக கைவிட வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது!