கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரின் படுகொலைக்கு தொடர்புடையதாக போலீசார் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில், கூலிப்படையினரை மட்டுமே போலீசார் கைது செய்து வருவதாகவும், அரசியல்வாதிகளை ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் விசாரணை கூட நடத்தவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த பட்டியலை கொடுப்பதற்கு முதல்வர் அனுமதி தர வேண்டும் என தலைமைச் செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய் சங்கர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தம்மன் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அஸ்வத்தமனை ரவுடி என்று தெரிந்தும் காங்கிரஸ் கட்சியில் இணைத்து பதவி வழங்கியது செல்வப்பெருந்தகை என்றும், வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் பழைய இரும்புகளை (ஸ்கராப்) எடுப்பது, தினக்கூலிகளுக்கு ஆட்களை அனுப்புவது என பல தொழில்களில் செல்வப்பெருந்தகை, அஸ்வத்தம்மன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாலும், அதன் மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளதால், அவரை போலீசார் விசாரணை நடத்தாமல் இருப்பதாகவும் கூறி செல்வப்பெருந்தகையை உடனடியாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்போது தான் முறையாக போலீசார் விசாரிப்பார்கள் என்றும், ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த கடிதத்தால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையின் பதவி பறிக்கப்படுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.