விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் காலையில் வேலைக்கு செல்வதற்காக பெண்கள் முதியோர்கள் என பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். அவர்கள் அன்றாடம் கூலி தொழில் செய்து வருவதால் வயலில் இறங்கி வேலை செய்வதற்காக கைகளில் மண்வெட்டி, கடப்பாரை, சாந்து தட்டு பொருட்களை கைகளில் வைத்திருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அரசு பேருந்து ஒன்று வந்தது. அவர்கள் கைகள் காட்டி நிறுத்த சொல்லியும் இவர்களை பார்த்து பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அதே பேருந்து காரைக்குளம் சென்று மீண்டும் வருகையில் பேருந்தை ஊரணிப்பட்டு நிறுத்தத்தில் பேருந்தை பெண்கள் சிறைபிடித்து நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கூறியதாவது : எதுக்கு எங்க ஊரு பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ நிப்பாட்டமா போறிங்கனு கேட்டதுக்கு நாங்க பஸ் ஸ்டாப்புல எல்லாம் பஸ்ஸ நிறுத்த முடியாது, கடப்பாரை, மண்வெட்டி எல்லாம் கொண்டு வந்தா இதை எல்லாம் ஏத்தக்கூடாதுனு சொல்லிருக்காங்க, அதனால ஏத்த முடியாதுனு சொன்னாங்க. நாங்க இதை வீடியோ எடுத்து ரிப்போர்ட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு நீங்க எங்க வேணும்னாலும் ரிப்போர்ட் பண்ணிக்கோங்க, வண்டியை நிறுத்த முடியாதுனு சொன்னாங்க. பிரைவேட் பஸ் நிறுத்தி ஏத்திட்டு போறாங்க, கவர்மண்ட் பஸ்ல மட்டும் எங்களை ஏத்த மாட்டேங்குராங்க. ஸ்கூல் பசங்கள கூட ஏத்தாம வேகமா போறாங்க.இவ்வாறு அந்த பெண்மணி பேசினார்.
இதுதொடர்பாக வயது முதிர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது : நாங்க எதுக்குய்யா உங்களுக்கு ஓட்டு போட்டோம், நாங்க அம்புட்டு பேரும் நடக்க முடியாதவங்க, அம்புட்டு பேரும் கூலி வேலை பாக்குருவுங்க, நூறு நாள் வேலைக்கு வந்துருக்கோம், ஒருத்தன் கூட வண்டிய நிப்பாட்ட மாட்டேங்குறாங்க,நீங்கதான் வழி காட்டணும் சாமி. இவ்வாறு பேசினார்.
பெண்களுக்கென இலவச பேருந்து என கூறிவிட்டு பேருந்தை நிறுத்தாமல் பெண்களை அலைக்கழிப்பதுதான் திராவிட மாடலா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.