சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர், முகவரி, வார்டு எண், மண்டலம் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிய வசதியாக, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. முகவரி தேடுவோருக்கு, இந்த தெரு பலகைகள் உதவுகின்றன.
ஆனால் அந்த பெயர் பலகையை பார்த்தால் மக்களுக்கு உதவும் வகையில் இல்லை. மக்களை மேலும் குழப்பும் வகையில் தான் உள்ளது. திமுக ஆட்சி தமிழை வளர்க்கிறோம் என்று தமிழை போற்றும் விதமாக, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாக திமுக அரசு தம்பட்டம் அடித்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக, அரசு கட்டடங்களில் ‘தமிழ் வாழ்க’ என எழுதுதல், அரசு கோப்புகளில் தமிழில் கையெழுத்து உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தெரு பெயர் பலகையில் எழுத்துப் பிழை உள்ளது அதிருப்தியளிக்கிறது.
அந்த வகையில், நுங்கம்பாக்கம் பிரதான சாலை மற்றும் மகாலிங்கபுரம் பிரதான சாலை இணைப்பு பகுதியில், மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், ‘மகாலிங்கபுரம்’ என்பதற்கு பதில், ‘மாகலிங்கபுரம்’ என, எழுத்துப்பிழையுடன் பெயர் பலகை உள்ளது. இதுமட்டுமல்லாமல் பல தெருக்களில் வைத்துள்ள பெயர் பலகைகளில் இதுபோல் பிழைகள் உள்ளது. இந்த நிகழ்வு, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா ? என்று திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டு 2022 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2023 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 8.35 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக மாணவியர்,94.66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனாலும், தாய்மொழியான தமிழில் ஒருத்தர் கூட, ‘சென்டம்’ மதிப்பெண் எடுக்கவில்லை; மாறாக, 36 ஆயிரம் பேர், தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் பெரும்பாலோர் தமிழ் பாடத்திலே தோல்வி அடைவது மக்களுக்கு திமுக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.