ஓணம் திருநாளை ஒட்டி எக்ஸ் வலைத்தளப்பதிவில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் என கூறியிருந்தார். இதனை மலையாளத்திலும் குறிப்பிட்டிருந்தார். இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு தரப்பினர் விநாயகர் சதுர்த்திக்கு தவெக தலைவர் விஜய் ஏன் வாழ்த்துக் கூறவில்லை என கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பினர் தமிழ்ப்புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறாதது ஏன் என வினா எழுப்பி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி அளிக்காமல் தற்போது ஏன் கேரள மக்கள் மீது கரிசனம் என ஒரு சிலர் விஜயின் ஓணம் வாழ்த்தை குறிப்பிட்டு கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி, தீபஒளித் திருநாள் ஆகிய பண்டிகைகளுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக் கூறுவது இல்லை. அவர்கள் பாணியையே விஜய் தற்போது கையில் எடுத்துள்ளாரா? என்கிற சந்தேகம் மக்களுக்கு வலுத்து உள்ளது. பெரும்பான்மையான ஹிந்துக்கள் இருக்கும் தமிழகத்தில் ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் ஹிந்துக்களை பகைத்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் அவர் இருந்தால் முதல்வர் பதவிக்கு எவ்வாறு தகுதியானவர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.