திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 240 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 48 சிறார் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆணவ கொலை, 16 ஜாதிய கொலைகள், 45 முன்விரோதக் கொலைகள் நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ., மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் படிப்படியாக முன்னேறி வந்தாலும், அங்கு அரங்கேறும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன? இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எத்தனை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநகரில் 58 கொலைகளும், புறநகரில் 182 கொலைகள் என மொத்தமாக சுமார் 240 கொலைகள் நடைபெற்றுள்ளன. அதில் ஒரு ஆணவ கொலை, 16 ஜாதிய கொலைகள், 45 முன்விரோதக் கொலைகள் அடங்கும். இதில் 48 சிறார் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவங்களில் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர், என அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளில் இவ்வளவா? கொலை நகராக மாறுகிறதா திருநெல்வேலி? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.