கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் நடந்து வருகிறது. இந்த போரினால் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஹமாஸிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், “இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து யுத்தம் நடத்துவோம். ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். அதோடு, எதிரிகள் எங்களுடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எங்கள் மண்ணில் புனிதமான முறையில் போராடுகிறோம்” என்றார்.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முன் 46 ஹமாஸ் பயங்கரவாதிகள் அடங்கிய மற்றொரு குழு சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்புவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் ஹமாஸுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். “இப்போதே சரணடையுங்கள் அல்லது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். நான் ஹமாஸிடம் சொல்கிறேன்: அது முடிந்துவிட்டது. ஹமாஸ் தலைவருக்காக சாக வேண்டாம். இப்போதே சரணடையுங்கள்”. இதனால் பலர் சரணடைய ஆரம்பித்துள்ளனர்.