திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் திமுக சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா, கடந்த பிப்.17-ம் தேதி நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி 1,500 பேருக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். பொற்கிழி வாங்கி யோருக்கு ரூ.5,000 மதிப்புள்ள சேலை, வேட்டி, துண்டு, பை, வெள்ளிப் பதக்கம் ஆகிய வற்றோடு ரூ.20,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிலருக்கு மட்டுமே நேரில் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பணத்தை வழங்கினர்.
இந்நிலையில், கண்ணங்குடி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த சிலருக்கு ரூ.8,500 முதல் ரூ.10,000 வரை மட்டுமே வழங்கியதாவும், மீதியை நிர்வாகிகள் பதுக்கிக் கொண்டதாகவும் பொற்கிழி வாங்கிய மூத்த உறுப்பினர்கள் வேதனையோடு புகார் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தில் பலருக்கும் அறிவித்தபடி ரொக்கப் பணம் கொடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இது குறித்து சித்தானூர் சீனிவாசன், புளிக்காடு நடராஜன் ஆகியோர் கூறுகையில் ‘‘ நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வில் உள்ளோம். எங்களை கவுரவப்படுத்தும் விதமாக ரூ.20,000 ரொக்கத்துடன் பொற்கிழி தருவதாக கூறினர். ஆனால் திமுக நிர்வாகிகள் எங்களிடம் ரூ.10,000 முதல் ரூ.11,500 வரை குறைத்து கொடுத்தனர். இதே போன்று பலரிடமும் பணத்தை எடுத்துள்ளனர் என்று கூறினர்.