திமுக அரசு நிறைவேற்றாத திட்டங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்பது ஏமாற்று வேலை – அண்ணாமலை !

திமுக அரசு நிறைவேற்றாத திட்டங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்பது ஏமாற்று வேலை – அண்ணாமலை !

Share it if you like it

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயன்பாளையம், காடம்பாடி, சாமளாபுரம், சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில், பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நமது கோவை, விவசாயம் மற்றும் தொழில்துறை சிறந்து விளங்கும் பகுதி. கடந்த பத்து ஆண்டுகளாக, மத்தியில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் இருந்தும், கோவையில் எதிர்க்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கோவைக்குத் தேவையான நலத்திட்டங்களைக் கேட்டுப் பெறவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, எந்த முன்னேற்றமும் கோவைக்கு ஏற்படவில்லை. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர், கோவையின் வளர்ச்சியை, பின்னோக்கிக் கொண்டு சென்று விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப், பாராளுமன்றத்தில் கோயம்புத்தூர் என்ற வார்த்தையைக் கூட கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்தவில்லை. எனவே, வளர்ச்சியை மீட்டெடுப்பது நமது கடமை.

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான், கோவையின் வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். திமுக முதலமைச்சர், அமைச்சர்கள், கவுன்சிலர்கள், கடந்த 33 மாதங்கள் நிறைவேற்றாத திட்டங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்பது ஏமாற்று வேலை. கடந்த பத்து ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும், மக்களுக்கான பணிகளைச் செய்ய இயலாத திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும், இந்தத் தேர்தலில் அளிக்கும் வாக்குகள் வீணாகத்தான் போகப் போகிறது.

கோவை மக்கள் முழுமையான அன்புடனும், ஆதரவுடனும், உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணாமலையாகிய என்னை, கோவை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தக் கொண்டு வந்துள்ள PMShri திட்டத்துக்கு ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். திமுக அரசு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மறுக்கிறது. இந்த நிதியின் மூலம், கோவை அரசுப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள், சுகாதாரமான பள்ளி வளாகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போன்ற தரம் உயர்ந்த கல்வி நமது குழந்தைகளுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கும் இரண்டு நவோதயா பள்ளிகள், கர்மவீரர் காமராஜர் பெயரில் கொண்டு வரப்படும். நவோதயா பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு, ஒரு ஆண்டுக்கு ஆகும் ரூ.88,000 கல்விச் செலவை, மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

கோவையில் அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக இருக்கும் காங்கேயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். சூலூர் விமானப்படை விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த குடும்பங்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் பணிகள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். காடம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை, படுக்கை வசதியுடன் கூடிய சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தை, நிலைக் கட்டணம் உயர்வு, பீக் அவர் கட்டண உயர்வு என்ற பெயரில் பல முறை உயர்த்தி, சுமார் 55% வரை கட்டண உயர்வை, சிறு குறு தொழிலாளர்கள் மேல் சுமத்தியுள்ளனர். குறிப்பாக, விசைத்தறியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சுமையைக் குறைக்க, கடந்த 2017-2021 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்திய பவர்டெக்ஸ் திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் கொண்டு வரப்படும். நாடா இல்லாத விசைத்தறி மற்றும் சோலார் மின்தகடுகள் அமைக்க மானியம் உயர்த்தி வழங்கப்படும். பொதுப்பிரிவு மானியம் 50% லிருந்து 80% ஆகவும், பட்டியல் சமூக மக்களுக்கான மானியம் 75% லிருந்து 90% ஆகவும், பழங்குடியினருக்கான மானியம், 90%லிருந்து 95% ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் நூல் வங்கி அமைக்கப்பட்டு, அதன் மூலம் நூல் விலையுயர்வு கட்டுப்படுத்தப்படும்.

சோமனூரில் ஜவுளிச் சந்தை அமைக்கப்பட்டு, நெசவாளப் பெருமக்கள், விசைத்தறியாளர்கள் அனைவருக்கும் உண்மையான விடிவுகாலம் ஏற்படுத்தப்படும். நொய்யல் நதியைச் சுத்தப்படுத்த, மத்திய அரசு, ரூ.990 கோடி ரூபாய் வழங்கியும், பணிகள் முறையாக நடக்கவில்லை. இந்தப் பணிகளைக் கண்காணித்து, நொய்யல் நதி மீட்டெடுக்கப்படும்.

கான்கிரீட் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மோடி வீடு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, பராமரிக்கப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் ஊழலைக் குறைக்க, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, வாகனங்களுக்கான உறுதிச் சான்றிதழ் (FC) முதலானவை, கணினி வழியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சோமனூர் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சாமளாபுரம் பொதுமக்கள் எழுச்சியால், மதுக்கடை இல்லாத பேரூராட்சியாக சாமளாபுரம் இருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

கோவை தொகுதியின் உட்கட்டமைப்பு மேம்பட, குடி நீர்ப் பிரச்சினைகள் தீர, சாலைகள் மேம்பட, நமது குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வியையும் எதிர்காலத்தையும் உருவாக்க, வளர்ச்சி பெற்ற கோவை, வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாக, வரும் ஏப்ரல் 19 அன்று, நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை. உலக அரங்கில், மிக வலிமையான தலைவராக இருக்கும் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *