இண்டி கூட்டணி என சொல்லிக்கொண்டு, கூட்டணி கட்சியிடமே தோற்பது வெட்கக்கேடானது – நாராயணன் திருப்பதி !

இண்டி கூட்டணி என சொல்லிக்கொண்டு, கூட்டணி கட்சியிடமே தோற்பது வெட்கக்கேடானது – நாராயணன் திருப்பதி !

Share it if you like it

‘அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி இறந்து விட்டார்’ என்ற நிலையில் தான் இன்று INDI கூட்டணி உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன என்று இண்டி கூட்டணியை விமர்சித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து தி மு க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று விட்டதாகவும், பாஜக கடும் தோல்வியடைந்ததாகவும் துள்ளிக் குதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நான்கு இடைத்தேர்தல்களில் அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்ததோடு, பாக்டா தொகுதியில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரனாகட் தக்க்ஷின் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி (சி பி எம்) டெபாசிட் இழந்து 13,082 வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் 74,485. மனிக்டாலா தொகுதியில் போட்டியிட்ட சி பி எம் வெறும் 9502 வாக்குகள் பெற்று போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வி டெபாசிட்டை கூட இழந்து நிற்கிறது.

பீகாரில் ரூபாலி தொகுதியில் வெற்றி பெற்றது சுயேச்சை வேட்பாளர். இரண்டாம் இடம் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கு. INDI கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு இடங்களை பெற்றுள்ள நிலையில், ஒரு இடத்தில் பாஜக வென்றுள்ளது பலமே!

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாபில் INDI கூட்டணியின் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், அதே INDI கூட்டணியின் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, இரண்டாவது இடம் பாஜகவுக்கு. இதை தங்கள் கூட்டணியின் வெற்றி என காங்கிரஸ் சொல்வது கேலிக்கூத்து.

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவுக்கு தோல்வி தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தேர்தலை அ தி மு க புறக்கணித்திருந்தாலும் அக்கட்சி தி மு க வின் ‘B’ டீமாய் செயல்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியுற்றது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்லது எதிர்பாராததோ அல்ல என்பதை அரசியல் புரிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.

பல மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் படு தோல்வி அடைந்துள்ளதோடு, மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டும், டெபாசிட்டை கூட தக்க வைக்க இயலாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. INDI கூட்டணி என்று சொல்லிக்கொண்டு பஞ்சாப், மேற்கு வங்காள மாநிலங்களில் அதே கூட்டணி கட்சியிடம் தோற்பது வெட்கக்கேடானது என்பது குறித்து கவலைப்படாமல், தோல்வியைத் தழுவினாலும் பாஜக தோற்றுவிட்டது என்பது மலிவான பசப்பு அரசியல்.

‘அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி இறந்து விட்டார்’ என்ற நிலையில் தான் இன்று INDI கூட்டணி உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தை தவிர மற்ற மாநில இடைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்துள்ளது என்பதே உண்மை. இதே நிலை நீடித்தால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் காணாமல் போவதோடு, விரைவில் வெற்றுத்தாளில் இப்போதுள்ள INDI கூட்டணி சுக்கு நூறாக உடைந்து போகும் என்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *