ஏழை கிராம மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968ஆம் ஆண்டு படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன்.
கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்.
“நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட.” – ஆளுநர் ரவி