காவிரிப் பிரச்சினை. கச்சத்தீவு பிரச்சினை, ஜல்லிக்கட்டு தடை என எப்போதுமே தமிழ்ப் பாரம்பரியத்தை விட, தமிழர்களின் நலனை விட, பதவிதான் திமுகவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளமான X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பொய் சொல்வதை மட்டுமே முழு நேரப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த முறை ஆளுங்கட்சியாக இருக்கும்போது, யார் எதை நீட்டினாலும் கையெழுத்து போட்டுவிட்டு, டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று மன்னிப்பு கோரிய ஸ்டாலின் தற்போது, துண்டுச் சீட்டில் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அப்படியே வாசித்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, புதிய ஏமாற்றுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், ஜூலை 11, 2011 அன்று சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காங்கிரஸின் திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பசையான மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, ஊழலை மட்டுமே முழு நேர வேலையாக செய்து கொண்டிருந்த திமுகவுக்கு, அப்போது அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க நேரமில்லை.
திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்த, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்ட அறிவிப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டித்தது.
உடனே, மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள், தமிழக அரசிடம், ஜல்லிக்கட்டு நடத்த ஒரு அரசாணையை இயற்றுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பல வற்புறுத்தலுக்கும் ஆலோசித்தலுக்கும் பிறகு அன்றைய தமிழக அரசு ஒரு அரசாணையை நிறைவேற்றியது.
இதனை எதிர்த்து நடந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் திரு.துஷார் மேத்தா அவர்கள், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படியே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதே தவிர, ஒட்டுண்ணி மாடல் திமுகவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திமுக கூட்டணி ஜல்லிக்கட்டை தடை செய்ததால்தான், பாஜகவால் ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்க முடிந்தது என்று வேண்டுமானால் திமுக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
காவிரிப் பிரச்சினை ஆகட்டும், கச்சத்தீவு பிரச்சினை ஆகட்டும், ஜல்லிக்கட்டு தடை ஆகட்டும். எப்போதுமே தமிழ்ப் பாரம்பரியத்தை விட, தமிழர்களின் நலனை விட, பதவிதான் திமுகவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அத்தனை பிரச்சினைகளின் தொடக்கமும் திமுகவாகத்தான் இருந்து வருகிறது. தன் குடும்பத்தின் அதிகாரப் பசிக்கு, இன்னும் எத்தனை ஆண்டு காலம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த கோபாலபுரம் குடும்பம்?