திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மத மற்றும் சாதி மோதல்கள் நடைபெறுவது எழுதி வைக்கப்படாத தமிழகத்தின் தலைவிதி என்று இந்து முன்னணி குற்றசாட்டை முன் வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நேற்று கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பாஜக போன்ற கலவரக் கட்சிகளை அனுமதித்தால் கோவையில் தொழில் வளர்ச்சிக்கு ஆபத்து என்று பேசி உள்ளார். திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மத மற்றும் சாதி மோதல்கள் நடைபெறுவது எழுதி வைக்கப்படாத தமிழகத்தின் தலைவிதி…
குறிப்பாக கோவையில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதம் வளர்ந்தமைக்கும் திமுகவிற்கும் முக்கிய தொடர்புண்டு. 1998 ம் ஆண்டு அல்-உம்மா பயங்கரவாதிகளால் மாபெரும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். உளவுத்துறை எச்சரித்தும் கூட அதைக் கண்டும் காணாமல் விட்டதே திமுக அரசு தான் என்ற பரவலான குற்றச்சாட்டு இன்றளவும் உண்டு. மாறாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மூன்று ஆண்டுகளில் குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தது திமுக அரசு. 2022 ஆம் ஆண்டு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகில் கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் முபின் என்ற பயங்கரவாதி இறந்து போனான். இத்தகைய கொடூர செயலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர் தான் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின். என்.ஜ.ஏ விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்யப்பட்ட பிறகும் ஸ்டாலின் அவர்கள் இது சிலிண்டர் வெடிப்பு என்று நாடகம் ஆடினார். இப்படி கோவையில் மாபெரும் கலவரத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் வித்திட்ட திமுக இப்பொழுது நல்லவர் போல் நாடகம் ஆடி பாஜகவை கலவரக்கட்சி என்று குற்றம் சாட்டுகிறது. நீங்கள் அணிந்திருக்கும் போலி மதச்சார்பின்மை முகமூடியை மக்கள் அடையாளம் காண துவங்கி விட்டார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் முதல்வரே..!!