1986-ம் ஆண்டு வழக்கறிஞராக தன் பயணத்தை தொடங்கிய நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் 1999-ம் ஆண்டு நேரடியாக ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வழங்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2022-ம் ஆண்டு இடம்மாற்றப்பட்டார். இந்த நிலையில், 14 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய, நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் நேற்று பணி ஓய்வு பெற்றார். அதற்காக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் முன்னிலையில் அவருக்கு ஓய்வு பெறுபவருக்கான விடைபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த விழாவில் கலந்துகொண்டு நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் உரையாற்றியதாவது :-
இங்கே நான் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும். நான் ஆர்.எஸ்.எஸ்-ஸில் உறுப்பினராக இருந்தேன். சிறுவயது முதல் என் இளம் பருவம் வரை அந்த அமைப்பில் தான் இருந்தேன். அதற்காக நான் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தான் எனக்காக தைரியம், எல்லோரையும் சமமாக பார்க்கும் குணம், தேசபக்தி, வேலையில் முழுமையான ஈடுபாடு ஆகியற்றை கற்றுக்கொண்டேன்.
இப்போது எனக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் மத்தியில் சுமார் 37 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. நான் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தேன் என்பதற்காக எந்த சலுகைகளையும் பெற்றதில்லை. அப்படி சலுகைகளை ஏற்றுக்கொள்வது அந்த அமைப்பின் கொள்கைக்கு எதிரானது. பணக்காரர், ஏழை, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ் என யாராக இருந்தாலும் அனைவரையும் நான் சமமாகதான் நடத்தினேன்.
குறிப்பிட்ட கட்சி, கொள்கைக்காக ஒருதலைபட்சமாக இருந்ததில்லை. ஏனென்றால் நீதிக்காக சட்டம் வளையலாம், சட்டடத்துக்காக நீதி வளைந்துகொடுக்கக்கூடாது. இப்போதுகூட என்னால் முடியும் வேலைகளை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் என்னை அழைத்தால் அவர்களுக்காக உழைக்க சென்றுவிடுவேன். என் வாழ்வில் நான் எந்த குற்றத்தையும் செய்ததில்லை. எனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கிறது எனக் கூறுவதற்கு தைரியம் இருக்கிறது. அந்த அமைப்பில் இருப்பது ஒன்றும் தவறான விஷயமல்ல”. இவ்வாறு நீதிபதி உரையாற்றினார்.