டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது, நாட்டின் பெண் சக்தி பிரதமர் மோடிக்கு பக்கபலமாக உள்ளது. இந்த முறை தேர்தலில் தங்களின் உண்மையான பலத்தை ராகுல் காந்திக்கு காட்டுவோம் என நாரி சக்தி முடிவு செய்துள்ளது.
ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் தெரியாது. அதனை அவர் மதிக்கவில்லை. தாயின் ஆசீர்வாதத்தை விட பெரிய ஆசீர்வாதமும், சகோதரியின் பாசத்தை விட பெரிய பாசமும் இருக்க முடியாது. நாட்டை தென்னிந்தியா, வட இந்தியா என இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை என அவர் தெரிவித்தார்
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கறுப்புப் பணத்துக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்ட சொத்துக்களில், 5 சதவீதம் மட்டுமே அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமானது.
மீதமுள்ளவை கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மம்தாவின் அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.51 கோடியும், காங்கிரஸ் எம்.பி வீட்டில் இருந்து ரூ.355 கோடியும் கைப்பற்றப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்கிறார்கள். இந்த பணம் எங்கே போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியால் சொல்ல முடியுமா? இதற்கு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் அமித்ஷா கூறினார்.