தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 23 வயது இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது பாதிவழியில் . அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அவருடன் கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். பாலியல் வன்புணர்வு செய்த கவிதாசன் திமுகவைச் சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் பாப்பாநாடு காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளராக இருந்த சூர்யாவிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அப்புகாரை வாங்க மறுத்த பெண் காவல் ஆய்வாளர் சூர்யா, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அலைக்கழித்துள்ளார்.
பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு சட்ட உதவி வழங்காமல், அப்பெண்ணை அலைக்கழித்து மனஉளைச்சல் உண்டாக்கி, உயர் அதிகாரிகளுக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்காமல் இருந்த பெண் காவல் ஆய்வாளர் சூர்யா அவர்களை ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
கற்பை இழந்த துயரத்தோடு தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் சென்றால் புகாரை வாங்காமல் அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம் ? பெண் காவல் ஆய்வாளராக இருந்துக்கொண்டு, அவரின் வேதனையை எவ்வாறு புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும் ? இவ்வாறு நடவடிக்கை எடுக்காத பெண் அதிகாரியை பணிநீக்கம் செய்யாமல் ஆயுத படைக்கு மாற்றினால் இதுதான் தண்டனையா ? மக்கள் தவறு செய்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். இதுவே ஒரு அதிகாரி தவறு செய்தால் அந்த துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றுவது. இதுதான் தண்டனையா ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.