அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வசதி அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. இதையடுத்து, 2019-ம் ஆண்டு ‘ஹர் கர் ஜல்’ என்கிற திட்டத்தை மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகம் நடைமுறைபடுத்தியது. 2024-க்குள் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ‘ஜல் சக்தி மிஷன்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் எனப்படும் ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியமும் இணைந்து கண்காணித்து வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன. இத்திட்டம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. அந்த அறிக்கையில், இத்திட்டத்தின் மூலம் வயிற்றுப்போக்கு நோய்கள் சார்ந்த 4 லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சாதனையால் 8 லட்சம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகி இருக்கிறது. இத்திட்டம் செயல்பாட்டு வருவதற்கு முன்பு கிராமப்புறங்களில் குடிநீர் வினியோகம் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 2018-ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதமும், கிராமப்புற மக்கள் தொகையில் 44 சதவீதமும் வீடுகளில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். பாதுகாப்பற்ற குடிநீரை அருந்தியது, கடுமையான உடல்நலம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 2019-ம் ஆண்டு மட்டும் சுத்தமான குடிநீர், கழிப்பறை மற்றும் துாய்மை வசதி இல்லாத காரணத்தால், 14 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹர் கர் ஜல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், உயிரிழப்புகள் தடுக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறுமியர் வாழ்வு மேம்பட்டு, வாழ்க்கை எளிதாகி உள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்திய திட்டம் வேறொன்று இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.