கடந்த ஆண்டு திருச்சி வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து திரிகோணமலை, சம்பூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதனைத்தொடர்ந்து இன்று இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் 50 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
ஜல்லிக்கட்டை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்து செல்லும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வருகின்றனர். இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.